விவேக் சிக்கலான வழக்குகளை திறமையாக விசாரித்து குற்றவாளிகளை பிடிக்கும் ஒரு  காவல்துறை அதிகாரி. முக்கியமாக குற்றவாளி மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் உளவியலுக்குள் நுழைந்து ஒவ்வொரு வழக்கையும் கண்டுபிடிக்கிறார்.

Vellai Pookal review

அமெரிக்கா சென்ற அவருடைய மகன் அங்கே அமெரிக்க பெண்ணை காதல் திருமணம் செய்து கொள்வதால், அவருடனான பேச்சுவார்த்தை நிறுத்திவிடுகிறார். இந்த நிலையில் பணி ஓய்வு பெறும் விவேக், தனது நண்பரின் வற்புறுத்தலால் அமெரிக்காவில் வசிக்கும் தனது மகன் வீட்டுக்கு செல்கிறார். அங்கு தான் வசிக்கும் தெருவில் நடக்கும் மர்மமான சம்பவங்களை விசாரிக்க தொடங்குகிறார். அந்த சம்பவங்களின் தொடர்ச்சியாக தொடர் கொலைகள் நிகழ்கின்றன. ஒரு கட்டத்தில் விவேக்கின் மகனும் கடத்தப்படுகிறார்.இறுதியில் அந்த கொலையாளி யார்? அவர் கொலைகள் செய்வதற்கான காரணம் என்ன? அதனை விவேக் எப்படி கண்டுபிடிக்கிறார்? அதன் பின்னணியில் என்ன நடந்தது? என்பதே படத்தின் மீதிக்கதை.காமெடியில் இருந்து சீரியசான கதாபாத்திரத்தில் விவேக், கதையின் நாயகனாக படத்தை தாங்குகிறார். விசாரணை காட்சிகளிலும் மகன் மீதான பாசத்தை வெளிப்படுத்தும் உணர்வுபூர்வ காட்சிகளிலும் அனுபவ நடிப்பு தெரிகிறது. விவேக்குக்கு கிடைக்கும் அமெரிக்க நண்பராக சார்லி, விவேக் மகனாக தேவ், அவரது மனைவியாக பெய்ஜ் ஹெண்டர்சன், தேவ் தோழியாக பூஜா தேவரியா ஆகியோரும் தங்கள் தங்களின் நடிப்பை சிறப்பாக வெளிபடுத்தினார்கள். தமிழ்நாட்டு அதிகாரி அமெரிக்காவுக்கு சென்று விசாரிப்பது என்பது சில படங்களில் பார்த்த கதைதான் என்றாலும், திரைக்கதை புதிதாகவும் விறுவிறுப்பாகவும் அமைந்துள்ளது. அன்றாடம் நடக்கும் குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை சம்பவங்களை விறுவிறுப்பான சஸ்பென்ஸ் திரில்லராக கொடுத்த விதத்தில் கவனிக்க வைத்து இருக்கிறார் இயக்குநர் விவேக் இளங்கோவன். சின்ன சின்ன குறைகள் இருந்தாலும், கடைசியில் ஒரு நல்ல சஸ்பென்ஸ் திரில்லர் படம் பார்த்த உணர்வை கொடுக்கிறது. ராம்கோபால் கிருஷ்ண ராஜின் பின்னணி இசையும், கேஎல்.பிரவீனின் படத்தொகுப்பும் திகில் கூட்டுகிறது.மொத்தத்தில் `வெள்ளைப்பூக்கள்’ பூக்கட்டும்

Rating : 3.5 / 5

#VellaiPookal #Review