நடிகர்:   ஹிப்ஹாப் தமிழா ஆதி

நடிகை:  அனகா

இயக்குனர்: பார்த்திபன் தேசிங்கு

இசை: ஹிப்ஹாப் ஆதி

ஓளிப்பதிவு: அரவிந்த் சிங்

பிரான்ஸ்க்கு சென்று செட்டிலாக வேண்டும் என்ற குறிக்கோளுடன் பாண்டிச்சேரியில் வாழ்ந்து வருகிறார் நாயகன் ஹிப்ஹாப் ஆதி. இவருடைய தாய் கவுசல்யா. ஒரு மோதலில் நாயகி அனகாவை பார்க்கிறார் ஆதி. முதல் சந்திப்பிலேயே அவர் மீது ஒருவிதமான ஈர்ப்பு ஏற்படுகிறது. ஹாக்கி வீராங்கனையான அனகாவை மீண்டும் சந்தித்தவுடன் அவர் மீது காதல் வயப்படுகிறார். இவருடன் பழக நினைக்கும் ஆதி, அனகா பயிற்சி செய்யும் மைதானத்துக்கு நண்பர் ‘எரும சாணி விஜய்’ மூலமாக செல்கிறார். பல போராட்டங்களால் மீட்கப் பட்ட அந்த மைதானத்தின் பயிற்சியாளராக இருக்கிறார் ஹரிஷ் உத்தமன். ஹாக்கி தேர்வின் போது நாயகி அனகாவுக்கு பிரச்சனை ஏற்படுகிறது. இதில் ஆதி தலையிட்டு, சிறப்பாக ஹாக்கி விளையாடி நாயகியின் தேர்விற்கு உதவுகிறார். இதைப் பார்க்கும் பயிற்சியாளர் ஹரிஷ் உத்தமன் உட்பட பலர் வியப்படைகிறார்கள். பிறகு அவர் இன்டர்நேஷனல் அளவில் இந்திய ஜூனியர் அணிக்கு விளையாடியவர் என்று தெரியவருகிறது. இந்நிலையில், அமைச்சராக இருக்கும் கரு பழனியப்பன், உலக நாடுகளே வேண்டாம் என்று ஒதுக்கிய ஒரு மருந்து கம்பெனியை இந்தியாவில் தொடங்க அனுமதி கொடுக்கிறார். அந்நிறுவனம் இதற்காக மைதானத்தை தேர்வு செய்கிறார்கள். மைதானத்தை விட்டுவிட கூடாது என்று பயிற்சியாளர் ஹரிஷ் உத்தமன் பல்வேறு வழிகளில் போராடுகிறார். ஒரு கட்டத்தில் ஹாக்கி விளையாடி வெற்றி பெற்றால் மைதானத்தை மீட்கும் சூழல் ஏற்படுகிறது. இதற்காக ஆதியை விளையாட அழைக்கிறார். ஆனால், ஆதியோ விளையாட மறுகிறார். இறுதியில் அந்த மைதானத்தை ஹரிஷ் உத்தமன் மீட்டெடுத்தாரா? ஹாக்கி விளையாட ஆதி மறுக்க காரணம் என்ன? அமைச்சர் கரு பழனியப்பனின் திட்டம் நிறைவேறியதா? என்பதே படத்தின் மீதிக்கதை.

natpethunai-film-review

படத்தில் கதாநாயகனாக நடித்திருக்கும் ஆதி, துறுதுறு இளைஞனாக நடித்திருக்கிறார். படம் முழுக்க இளமை துள்ளலுடன் நடித்து ரசிகர்களை கவர்ந்திருக்கிறார். நாயகி அனகாவை துரத்தி துரத்தி காதலிப்பது, நடனம், விளையாட்டு என அனைத்திலும் ஸ்கோர் செய்திருக்கிறார். குறிப்பாக இடைவெளிக்கு முன் உள்ள காட்சியில் அசர வைக்கிறார். நாயகி அனகா கொடுத்த வேலையை செய்திருக்கிறார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு திரையில் தோன்றியிருக்கும் கவுசல்யா, அதே அழகுடன் அளவான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.  அரசியல்வாதியாக வரும் கரு பழனியப்பன், யதார்த்தமான நடிப்பால் கைத்தட்டல் பெற்றிருக்கிறார். இவர் பேசும் வசனங்கள் நிகழ்கால அரசியல் சூழ்நிலையை ஞாபகப்படுத்துகிறது. அவரது வசனம் செய்கை அனைத்தையும் பார்க்கும் போது அமைதிப்படை மணிவண்ணனை  ஞாபகப்படுத்துகிறது. பயிற்சியாளராக வரும் ஹரிஷ் உத்தமன் மிடுக்கான நடிப்பால் கவனிக்க வைத்திருக்கிறார். நண்பர்களாக வருபவர்கள் அனைவரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.  ஹாக்கி விளையாட்டை மையமாக வைத்து படம் இயக்கி இருக்கிறார் இயக்குனர் பார்த்திபன் தேசிங்கு. மைதானம் விளையாட்டு என பல படங்கள் வந்திருந்தாலும், இதில் வித்தியாசம் காண்பித்திருக்கிறார். விளையாட்டில் இருக்கும் அரசியல், அரசியல்வாதிகளின் தலையீடு என அனைத்தையும் சொல்லியிருக்கிறார். கிரிக்கெட்டை தவிர மற்ற விளையாட்டில் உலகளவில் விளையாடினாலும் அது மக்களுக்கு தெரியாது. அந்தளவுக்கு நம்நாடு இருக்கிறது என்பதை சொல்லியிருக்கிறார். வசனங்கள் படத்துக்கு பெரிய பலம். ஒரு சில லாஜிக் மீறல்களை தவிர்த்திருக்கலாம். அரவிந்த் சிங்கின் ஒளிப்பதிவு கண்களுக்கு விருந்து படைத்திருக்கிறது. ஆதியின் இசையில் பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட்டாக அமைந்திருக்கிறது. பின்னணி இசையில் பெரிதளவு கைகொடுத்திருக்கிறார்.

மொத்தத்தில் ‘நட்பே துணை’  ஏப்ரல் மாதத்தில் நல்ல வரவேற்பு.

Rating : 3.5/5

 

#NatpeThunai #Review  #HiphopAadhi